

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.19.59 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனையில் உச்சத்தில் இருந்தவர் மார்ட்டின். லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்த பிறகு, அவர் வட மாநிலங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கொல்கத்தாவில் அதிக அளவில் லாட்டரி விற்பனை கிளைகளை தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், குவாஹாட்டி, சிலிகுரி, காங்டாக், ராஞ்சி என நாடு முழுவதும் 72 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ரூ.8.25 கோடி ரொக்கம், ரூ.24.57 கோடிமதிப்புள்ள தங்க, வைர நகைகள்,ரூ.1,214 கோடி சொத்து ஆவணங்களை வருமான வரித் துறைஅதிகாரிகள் கைப்பற்றினர்.
சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை அமலாக்கத் துறைஅதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து மார்ட்டின் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், 2019-ம் ஆண்டு ஜூலையில் மார்ட்டின் மற்றும் அவர் தொடர்புடைய நபர்களின் ரூ.258 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர்.
இந்நிலையில், மேலும் ரூ.19.59கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த 22-ம் தேதி முடக்கியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு நடந்தசிக்கிம் லாட்டரி முறைகேடு தொடர்பான வழக்கில், இந்த சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ.277.59கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.