

சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாதபோது, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது, கரோனா அச்சம் ஓரளவுக்கு குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சில மாணவர்கள் பேருந்துகளின் படிகட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. படிக்கட்டு பயணத்தை தட்டிக்கேட்ட பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவமும் நடைபெற்றது. இதைக் கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாணவர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவும், அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்குமாறு போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார், பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு போலீஸார் நேரில் சென்று, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் போலீஸார், சிறிய விபத்து நேரிட்டாலும் உடல் றுப்புகள் பாதிக்கப்படும் அல்லது உயிரிழப்புகூட நேரிடும் என்று மாணவர்களுக்கு விளக்கி வருகின்றனர். மேலும், சாகசம் என்ற பெயரில், பேருந்தின் பக்கவாட்டுக் கம்பிகளில் தொங்கிச் செல்வதை தவிர்க்குமாறும் மாணவர்களை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.