

தாம்பரம்: புதிதாகப் பிரிக்கப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வரையறை குறித்த, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், நேற்று தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்துகொள்வதாக இருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாகஉருவாகியுள்ள பொன்னேரி, திருநின்றவூர் நகராட்சிகளில் வாக்களிக்க வசதியாக வார்டுகளை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளில், வீடுகளை அடிப்படையாக வைத்து வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதால், ஒரே தெருவுக்கு 2 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி உள்ளதாக புகார் எழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி கருத்து கேட்பின்போது, அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக என பல தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததோடு, மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பேசும்போது, “4 மாவட்டங்களைச் சேர்த்து நடத்தப்படும் இந்தக் கூட்டம் ஏற்புடையதல்ல. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து, ஒருவர் கூட இந்தக் கூட்டத்துக்கு வராததால் அங்கு வார்டு வரையறை சரியாகச் செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிக தூரம் காரணமாகவே, அந்த மக்கள் இங்கு வருவதைத் தவிர்த்துள்ளனர். வார்டு வரையறையில் அதிகாரிகள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கவில்லை. அதிமுக வெற்றி பெறக் கூடிய வார்டுகளை வேண்டுமென்றே சிதைத்துள்ளனர்” என்றார்.
செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேதா சுப்ரமணியம் கூறும்போது, “சட்டப்படி 90 நாட்களுக்குள் வார்டு வரையறை மீது, தங்கள் கருத்துகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.
ஆனால், அவசர கோலத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. பெருங்களத்தூர் பகுதி பேரூராட்சியாக இருந்தபோது, பாஜக வெற்றிபெற்று வந்த 15-வது வார்டு பிரிக்கப்பட்டு, 8 கிமீ தூரத்தில் உள்ள தாம்பரம் நகராட்சியின் 32-வது வார்டுடன் இணைத்து தாம்பரம் மாநகராட்சியின் 55-வது வார்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல், பாஜக வெற்றி பெறும் வார்டுகளை வேண்டுமென்றே, அதிகாரிகள் மாற்றியமைத்துள்ளனர்” என்றார்.
இக்கூட்டத்தில், மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் ஆ.சுந்தரவல்லி, உறுப்பினர்களான பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் செங்கல்பட்டு ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் மா.ஆர்த்தி திருவள்ளூர் ஆல்பி ஜான் வர்கீஸ், ராணிப்பேட்டை டி.பாஸ்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செங்கல்பட்டு-259, காஞ்சிபுரம்-39, திருவள்ளூர்-3, ராணிப் பேட்டை-6மனுக்களை பொதுமக்கள் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.