Published : 24 Dec 2021 09:03 AM
Last Updated : 24 Dec 2021 09:03 AM

இதுவரையில் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரிப்பு; நகர பேருந்துகளில் 66 சதவீதமாக உயர்ந்த பெண் பயணிகள்: கூட்ட நெரிசலால் இடமின்றி படியில் பயணிக்கும் மாணவர்கள்

சென்னை: அரசு நகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 66 சதவீதமாக உயர்ந்துள்ளதால், இதுவரையில் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் இடமின்றி மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு குறைந்தது. இதனால் கரோனா குறித்த அச்சமும் பொதுமக்களிடம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பாதிப்புக்கு முந்தைய அளவில் இருந்த பயணிகள் எண்ணிக்கையை மீண்டும் தொட்டுள்ளது. அதன்படி, தினமும் 1.90 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர்.

கட்டணச் சலுகைகள்

தமிழக அரசின் உத்தரவின்பேரில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணத் திட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பாக, பெண் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதால், அரசு நகரப் பேருந்துகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சில வழித்தட பேருந்துகளில் இடமின்றி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற அரசின் திட்டத்தால், நகரப் பேருந்துகளில் 23 சதவீதம் கூட்டம் அதிகரித்துள்ளது. அதன்படி, நகரப் பேருந்துகளின் மொத்த பயணிகளில் 67 சதவீதம் பேர் அரசின் சலுகை திட்டத்தில் பயணம் செய்கின்றனர். நகரப் பேருந்து ஒன்றில் ஒரு நாளைக்கு சராசரியாக 240 பேர் பயணம் செய்த நிலையில், தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதால், நகரப் பேருந்துகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சில வழித்தட பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மாற்றுத் தீர்வு என்ன?

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழக அரசின் சலுகையால் அரசு நகரப் பேருந்துகளில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலால் அனைத்து பயணிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, இதற்கான மாற்றுத் தீர்வை அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனி வாகன வசதி ஏற்படுத்தலாம். அல்லது தனியார் நகரப் பேருந்துகளிலும் பயணிக்க அனுமதிக்கலாம். இதற்கான மானியத் தொகையை தமிழக அரசு வழங்க ஏற்பாடு செய்யலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x