Published : 24 Dec 2021 10:44 AM
Last Updated : 24 Dec 2021 10:44 AM

கல்விக் கட்டண உயர்வுக்கு போராடிய 11 மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை: பல்கலைக்கழகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்விக் கட்டண உயர்வுக்கு போராடிய மாணவர் பேரவைத் தலைவர் உட்பட 11 மாணவர்கள் 5 ஆண்டுகள் கல்வியை தொடர புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பிரதேச துணை செயலாளர் சச்சின் மற்றும் பிரதேச குழு நிர்வாகிகள் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறுகையில், “புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி முதல் 35 நாட்களுக்கு மேலாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் பேரவைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதிமன்ற தலையீட்டின் காரணமாக போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மாணவர் பேரவைத் தலைவர் பரிட்சை யாதவ் உள்ளிட்ட 11 மாணவர்கள் 5 ஆண்டுகள் புதுச்சேரி பல்கலையில் கல்வியை தொடரதடை விதித்துள்ளது. அத்துடன் இவர்கள் 5 ஆண்டுகள் பல்கலைக் கழக வளாகத்தில் நுழைய தடை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு போராடிய மாணவர்கள் மீது 18 மாதங்கள் காத்திருந்து பழி வாங்கும் செயலில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது” என்று குற்றம் சாட்டி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x