

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும், திமுக, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து, ‘‘கூட்டம் நடைபெறும் தேதியை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் நாளில் மட்டுமே உறுப்பினர்களிடம் தீர்மானங்கள் தொடர்பாக கையெழுத்து பெற வேண்டும். முன்கூட்டியே கையெழுத்து பெறக்கூடாது ’’ என வலியுறுத்தினர். மேலும். கூட்டத்தில் வழக்கம்போல, உறுப்பினர்கள் அமர நாற்காலிகள், மேஜைகள் வழங்க வேண்டும். தரையில் அமர வைக்கக்கூடாது. ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான கட்டிடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எதனடிப்படையில் தாரை வார்க்கப்பட்டது எனக் கூறி, அந்த நடவடிக்கைகளை கண்டித்து மொத்தமுள்ள 27 உறுப்பினர்களில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக ஒன்றியக் குழுத் தலைவர் காயத்ரிஅசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது கூட்டம் நடத்தப்பட்டு 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றியக் குழுக் கூட்ட அரங்கில் மேஜை, நாற்காலிகள் இல்லை என ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். மேலும், மேஜை, நாற்காலிகள் வாங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிகாரிகள் மேஜை, நாற்காலிகளை வாங்கித் தரவில்லை. இதை சுட்டிக்காட்டவே, தரையில் ஜமுக்காளம் விரித்து அதில் அனைவரையும் அமரவைத்து கூட்டம் நடத்தப்பட்டது என்றார்.
இதுகுறித்து திமுக மூத்த உறுப்பினர் கோமதிசண்முகம் கூறும்போது, ‘‘கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் தற்போதைய செயல்பாடு, இதுவரை இல்லாத வகையில் உள்ளது. தலைவர் இருக்கை அருகே துணைத் தலைவருக்கு இருக்கை வழங்க வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் இருக்கைகள் வழங்காமல், தரையில் அமர வைத்துள்ளனர். உறுப்பினர்களிடம் கூட்டம் தொடர்பாக முன்கூட்டியே கையெழுத்து வாங்குகின்றனர். 6 மாத காலமாக கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு பங்கேற்பு பயணப்படி வழங்குவதில்லை. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரின் செயல்பாடுகள் தன்னிச்சையாக உள்ளன’’ என்றார்.