Published : 23 Dec 2021 07:06 PM
Last Updated : 23 Dec 2021 07:06 PM

கடல்சார்‌ தொலைநோக்கு திட்டம்‌ மூலம்‌ 20 லட்சம்‌ வேலைவாய்ப்புகள்‌ உருவாகும்‌: ரவீந்திரநாத் எம்.பி. பேச்சு

சென்னை

சென்னை: கடல்சார்‌ தொலைநோக்கு திட்டம்‌ 3 லட்சம்‌ கோடி முதலீட்டை உள்ளடக்கியது. இதன்‌ மூலம்‌ 20 லட்சம்‌ வேலைவாய்ப்புகள்‌ உருவாகும்‌ என்று ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார்.

இந்திய கடல்சார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சென்னை வளாகத்தில்‌ பணிமனை திறப்பு விழா மற்றும்‌ விசாகப்பட்டினம்‌ வளாகத்தில்‌ புதிய கட்டிடங்கள்‌ அர்ப்பணிப்பு விழா 23 டிசம்பர்‌ 2021 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கேபினட்‌ அமைச்சரும்‌, துறைமுகம்‌, கப்பல்‌ மற்றும்‌ நீர்வழி, மற்றும்‌ ஆயுஷ்‌ துறை அமைச்சருமான சர்பானந்த சோனோவல்‌ கலந்து கொண்டார்‌. மேலும்‌, மத்திய அமைச்சர்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ கலந்துகொண்ட இவ்விழாவில்‌ பல்கலை.யின்‌ உறுப்பினரும், எம்.பி.யுமான ரவீந்திரநாத்‌ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்‌. கடல்சார்‌ பல்கலை.யின்‌ வேந்தர் சங்கர் விழாவிற்குத் தலைமை வகித்தார்‌.

இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆற்றிய உரை:

"சென்னை கடல்சார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சென்னை வளாகத்தில்‌ பணிமனை திறப்பு விழா மற்றும்‌ விசாகப்பட்டினம்‌ வளாகத்தில்‌ புதிய கட்டிடங்கள்‌ அர்ப்பணிப்பு விழாவில்‌ ஒரே நேரத்தில்‌ பங்கு கொள்வதில்‌ நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌.

இந்திய கடல்சார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அனைத்து அதிகாரிகளின்‌ ஒருங்கிணைந்த முயற்சிகளை நான்‌ பாராட்டுகிறேன்‌. மேலும்‌ இப்புதிய வசதிகள்‌ தனிநபர்கள்‌ மற்றும்‌ சமூகத்தின்‌ வளர்ச்சிக்கான கண்டுபிடிப்புகளை மேம்பட்ட அறிவின்‌ மூலம்‌ உருவாக்குவதை மேலும்‌ எளிதாக்கும்‌ மற்றும்‌ மேம்படுத்தும்‌ என்று நம்புகிறேன்‌.

இந்திய கடல்சார்‌ பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினராக இருப்பதால்‌, இந்தியாவில்‌ கடல்சார்‌ புரட்சியில்‌ முக்கியப் பங்கு வகிக்கும்‌ நிறுவனத்தின்‌ ஒரு பகுதியாக இருப்பதை நான்‌ எனது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்‌. உங்களில்‌ பலர், கடல்சார்‌ இந்தியா தொலைநோக்கு திட்டம்‌ - 2030ன்‌ கீழ்‌ முழு கடல்சார்‌ துறையையும்‌ மாற்றியமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது என்பதை அறிந்திருப்பீர்கள்‌. கடல்சார்‌ தொலைநோக்கு திட்டம்‌ 3 லட்சம்‌ கோடி முதலீட்டை உள்ளடக்கியது. இதன்‌ மூலம்‌ 20 லட்சம்‌ வேலைவாய்ப்புகள்‌ உருவாகும்‌. மேலும்‌ ஆண்டுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல்‌ துறைமுக வருவாயை உருவாக்கும்‌ திறன்‌ கொண்டது. கடல்சார்‌ இந்தியா 2030 தொலைநோக்கு திட்டத்தின்‌ முதற்கட்டமாக கடல்சார்‌ மேம்பாட்டு நிதி சுமார்‌ 25,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான கப்பல்கள்‌ போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதால்‌ பெரிய அளவிலான துறைமுகங்களும்‌ காலத்தின்‌ தேவையாக மாறுகிறது. பசுமையான நிலையான துறைமுகங்களை உருவாக்குவதில்‌ நமது அரசாங்கம்‌ மிகுந்த கவனம்‌ செலத்துகிறது என்பதை மத்திய அமைச்சர்‌ ஒப்புக்கொள்வார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலின்‌ பங்கு தற்போதைய 10%க்கும்‌ குறைவான அளவிலிருந்து 2030க்குள்‌ 60% ஐ எட்டும்‌ என நான்‌ அறிகிறேன்‌. இந்தியத் துறைமுகங்களில்‌ கையாளப்படும்‌ சரக்குப் போக்குவரத்தின்‌ அளவை 2020-ல்‌ 25% லிருந்து 2030 க்குள்‌ 75% உயர்த்தும்‌ திட்டமும்‌ அரசிடம்‌ உள்ளது.

கப்பல்‌ கட்டுமானத்தில “ஆத்மநிர்பாதா” நிலைக்கு மாறுவது மிகவும்‌ முக்கியம்‌. “மேக்‌ இன்‌ இந்தியா மேக்‌ ஃபார்‌ தி வேர்ல்டு" கொள்கையில்‌ கவனம்‌ செலுத்துவதன்‌ மூலம்‌ நமது நாடு 2030க்குள்‌ கப்பல்‌ கட்டுமானத்தில்‌ உலகின்‌ முன்னணி நாடாக மாறும்‌, இந்தியாவில்‌ கட்டப்படும்‌ கப்பல்களின்‌ எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது.

கடல்சார்‌ நிறுவனங்களைப் போலவே இந்தியாவின்‌ பயிற்சி மற்றும்‌ மேம்பாட்டுத் திறன்களை உலகத் தரத்திற்கு இணையாக வலுப்படுத்த முக்கியத்துவம்‌ அளிக்கப்படும்‌. இது இந்தியாவின்‌ கடலாதிக்கப் பங்கினை தற்போதுள்ள 12% சதவீதத்திலிருந்து 20% சதவீதமாக அதிகரிக்க உதவும்‌.

கடல்சார்‌ வணிக நடவடிக்கைகளில்‌ இந்த திட்டம்‌ எந்த ஒரு இடைத்தரகரும்‌ இல்லாமல்‌ நேரடியாகத் தொழிற்சாலைகளில்‌ இருந்து கொள்கலன்களை நகர்த்த உதவும்‌, இது ஏற்றுமதியாளர்களுக்கு எளிதாக வணிகம்‌ செய்யவும்‌ EDP-ஐ அதிகரிக்கவும்‌, அதன்‌ மூலம்‌ சர்வதேச வர்த்தகத்தில்‌ ஏற்றுமதியாளர்களின்‌ போட்டியை மேம்படுத்த உதவும்‌. மேலும்‌ கடலோர மற்றும்‌ நதிப் போக்குவரத்தை மேம்படுத்துவதில்‌ கவனம்‌ செலுத்துவதன்‌ மூலம்‌ செலவுகளை கணிசமாக குறைக்கலாம்‌. கடல்சார்‌ மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவதன்‌ மூலம்‌ இத்துறையில்‌ பங்குதாரர்களுக்கு நீண்டகால நிதி ஆதாரங்கள்‌ கிடைக்கும்‌. இது தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகங்களில்‌ பிரத்யேக கப்பல்‌ முனையங்களை அமைத்து கப்பல்களின்‌ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன்‌ மூலம்‌ அடுத்த பத்தாண்டுகளில்‌ இந்தியா உலகளாவிய கப்பல்‌ முனையமாக வளர வழிவகுக்கும்‌.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கடல்சார்‌ துறையின்‌ பெரும்‌ சாத்தியக்கூறுகளை மதிப்பிடும்‌ அதே வேளையில்‌ நமது அரசாங்கம்‌ அளிக்கும்‌ முழு ஆதரவுடன்‌, நாம்‌ ஒவ்வொருவரும்‌ வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறமையான கடல்சார்‌ சுற்றுச்சூழல்‌ அமைப்பினை உருவாக்குவதில்‌ பங்கு கொள்ள வேண்டும்‌. இது நமது நாட்டின்‌ பொருளாதாரத்தின்‌ அனைத்துத் துறைகளிலும்‌ போட்டியை மேம்படுத்தும்‌.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நமது முயற்சிகளை ஒன்றிணைத்து “தன்னம்பிக்கை இந்தியாவைக் கட்டியெழுப்பும்‌ பணியில்‌ இணைவோம்‌. நான்‌ இந்தியாவில்‌ கடல்சார்‌ பயிற்சியினை வழங்குவதற்கான கட்டமைப்பை இந்திய கடல்சார்‌ பல்கலைக்கழகம்‌ மேலும்‌ வலுப்படுத்தும்‌ வகையில்‌ தேவையான நிதி அளித்து உதவுமாறு மத்திய அமைச்சரை இந்த வாய்ப்பின்‌ மூலம்‌ நான்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

இந்த அருமையான நேரத்தில்‌ இந்திய கடல்சார்‌ பல்கலை.யின்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு மீண்டும்‌ ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்‌".

இவ்வாறு ரவீந்திரநாத் எம்.பி. பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x