

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில், தமிழகத்துக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தற்போது தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல், தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பான கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட, தேசிய கட்சிகளை அழைத்து, தேர்தல் ஏற்பாடுகளை விளக்கவும், ஆலோசனை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.
இதைத்தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் மீது வரும் புகார்கள், வழக்குகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.