

சென்னை: படிக்காமலேயே 117 பேர் தேர்ச்சியடைந்து பட்டம் பெற முயன்ற விவகாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி சென்னைப் பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அளித்தது. அந்த உத்தரவின்படி 1980-81ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் தொலைதூர கல்வி நிறுவனம் வாயிலாக ஆன்லைன் தேர்வில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், இந்த வாய்ப்பை பலரும் மிகத் தவறாக பயன்படுத்திக்கொண்டதை அடுத்து, 2020-ல் தேர்வு எழுதி முறைகேடாக தேர்ச்சி பெற்றதும், அதற்கான சான்றிதழ்களை பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மோசடி கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடாக தேர்ச்சி பெற முயன்றவர்களின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 100-க்கும்மேற்பட்டவர்கள் படிக்காமலேயே போலியாக பட்டம் பெற முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறைகேடு சம்பந்தமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவின் அவசரக் கூட்டம் கூடியது. இது குறித்து சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து முடிவெடுக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர்களின் 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும், இந்தக் குழு தனது அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குழு எடுக்கும் முடிவுகளை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் குழுவில் முடிவுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.