Published : 23 Dec 2021 08:46 AM
Last Updated : 23 Dec 2021 08:46 AM

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

சென்னை: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இப்போது இந்தத் தொற்று உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. உயிரிழப்புகள் பெரிதாகப் பதிவாக இல்லை என்றாலும் கூட பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அன்றாடம் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் பிப்ரவரி, மார்ச்சில் அடுத்த அலை வரலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்தியாவில் 230 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு ஒருவர் சிகிச்சையில் உள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் அன்றாட கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகினது.

முன்னதாக, மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் வார் ரூம்களை ஏற்படுத்துமாறும், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மாவட்ட அளவில் கரோனா புள்ளி விவரங்களை துல்லியமாக சேகரிக்குமாறும், கண்காணிப்பு, பரிசோதனை, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கவனம் செலுத்துமாறும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் அறிவித்தியிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வங்கி, வணிக வளாகம், அரசு அலுவலகங்கள் எனப் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட வேண்டும் என அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று பகல் 12 மணியளவில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் மக்கள் கூடுவதில் கட்டுப்பாடு போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விழாக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x