

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்துள்ளதாலும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாலும் ரயில்வே உள் ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் என எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளரும், தென்மாநில கூட்டு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, என்.கண்ணையா சென்னையில் நேற்று கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷனில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவித்தோம். இதன்படி, வரும் 11-ம் தேதி நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்திருந்தோம்.
இதற்கிடையே, மத்திய அரசு எங்களிடம் 3 முறை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இறுதியாக கடந்த 7-ம் தேதி எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும்போது, ‘5 மாநிலங் களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளதால் பணிகள் பாதிக்கப்படும். மேலும், உங்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், எங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜூலை11-ம் தேதி தொடங்க உள்ளோம்.
ஜூன் 9-ம் தேதி இந்த போராட்டத்துக்கான நோட்டீஸை நிர்வாகத் துக்கு வழங்கவுள்ளோம். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் 45 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இதில் ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 13 லட்சத்து 80 ஆயிரமாகும். மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.