

சென்னை: ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 4 நாட்களில் 456 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ.40 லட்சத்து 93,800 செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள் ளது.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கவும், விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்துக்கு கட்டணமில்லாத அவசரசிகிச்சை அளிக்கும் வகையிலும்,‘இன்னுயிர் காப்போம்’ என்றதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார்.
609 மருத்துவமனைகள்
இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசேஏற்றுக் கொள்கிறது. இத்திட்டத்தில் 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் காப்பீடு அட்டை பயனாளிகள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என்ற வேறுபாடின்றி தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும்அனைவருக்கும் 48 மணி நேரஇலவச சிகிச்சை அளிக்கப்படு கிறது.
456 பேருக்கு சிகிச்சை
இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் கடந்த 4 நாட்களில் 456 பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில் 372 பேருக்கு ரூ.31 லட்சத்து 67,050-ம், தனியார் மருத்துவமனைகளில் 84 பேருக்கு ரூ.9 லட்சத்து 26,750 என மொத்தம் 456 பேருக்கு ரூ.40 லட்சத்து 93,800 செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.