Published : 23 Dec 2021 08:45 AM
Last Updated : 23 Dec 2021 08:45 AM

அறநிலையத் துறை ஒத்துழைப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங்களை மீட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனு: கிருஷ்ணகிரி பையூர் வீர ஆஞ்சநேய சுவாமி மற்றும் கோதண்டராம சுவாமி கோயில்கள், நாகமங்கலம் அனுமந்தராய சுவாமி கோயில், பாலேகுளி பட்டாளம்மன் மற்றும்பெரியமலை பெருமாள் கோயில்,பழைய அரசம்பட்டி வரதராஜ பெருமாள் கோயில், கூலிகானபள்ளி காசி விஸ்வநாதர் கோயில்களின் சொத்துகள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளன. இதற்கு, அறநிலையத் துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை ஐஜி உத்தரவிட்டும், இதுவரையிலும் கோயில் நிலங்களின் விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே இந்த கோயில்களின் நிலங்களை பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாகநடந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துகளின் விவரங்களை வருவாய்துறையும் பத்திரப்பதிவுத்துறையும் கோரினால் அதைவழங்குவதற்கு அறநிலையத்துறைக்கு என்ன தயக்கம். அறநிலையத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை வருவாய் துறையால் மீட்க முடியாது.

அத்துடன் இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை ஆணையர் தீவிர கவனம் செலுத்த வேண் டும். மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகங்கள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.4-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x