Published : 23 Dec 2021 08:57 AM
Last Updated : 23 Dec 2021 08:57 AM

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்ற போதிலும், ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்கள் ஆசிரியர்கள் பணி யாற்றுகின்றனர்.

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாததால், கடந்த 2 ஆண்டுகள் குடும்ப உறவுகளுடன் இடைவெளி ஏற்பட்டதுபோல உணர்வு மேலோங்கியுள்ளது. பொதுவாக தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில்தான் குடும்பத்தினர், உறவினர்களுடன் வாழ்வதுபோன்ற மனநிலை ஏற்படும். இத்தகைய சூழலில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், அரையாண்டுக்கு விடுமுறை உண்டா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர்கள் பல நாட்கள் வீட்டில் இருந்தபோதிலும், அரையாண்டுத் தேர்வு நடக்காவிட்டாலும், பண்டிகைகால விடுமுறையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கரோனா சூழலால் மாணவர்களுக்கு விடுபட்ட கல்வி இடைவெளியை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள். அதேநேரத்தில், குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் காலம் பண்டிகைகாலம் மட்டுமே. எனவே, வழக்கமாக விடப்படும் கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையை இந்த ஆண்டும் வழங்கஉத்தரவிடுமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x