

கோவை: சாதிய உணர்வை எதிர்த்து நாட்டுக்காக பாடுபட்டவர் மூதறிஞர் ராஜாஜி என அவரது முன்னாள் உதவியாளரின் மகன் புகழாரம் சூட்டினார்.
இந்திய சுதந்திர வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரான மூதறிஞர் ராஜாஜி மீது சாதிய உணர்வு மிக்கவர் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவது உண்டு. இவை பொய்யானவை, திரிபுகளின் அடிப்படையிலானவை என்கிறார் ராஜாஜியிடம் உதவியாளராக பணியாற்றிய கிருஷ்ணனின் மகனான கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கண்ணன் (76).
மூதறிஞர் ராஜாஜி குறித்து 1968-ல் ரெ.தே.பெ.சுப்பிரமணியன் எழுதி, வெளியிட்ட ‘சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி’ என்ற நூலை, கண்ணன் மீள்பதிப்பு செய்து, கடந்த 10-ம் தேதி ராஜாஜியின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டார். கோவையில் வசிக்கும் அவர்‘இந்து தமிழ்திசை’யிடம் கூறியது:
எனது தந்தை கிருஷ்ணன், 1929 முதல் 1935 வரை ராஜாஜிக்கு உதவியாளராக பணியாற்றினார்.
நூலில் பல்வேறு தகவல்கள்
‘சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி’ நூலில் ராஜாஜியின் சாதியத்தை தவிர்க்கும் உணர்வுகள் குறித்து பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 1900-ல், தனது 23-வது வயதிலேயே சாதிபேதம் கூடாதென்பதை ராஜாஜி உணர்ந்தார். அப்பேதத்தை ஒழிப்பதில் அவரது பொதுவாழ்வு தொடங்கியது. சீர்திருத்தவாதியான அவர் பல சமபந்தி போஜனங்களை நடத்தியுள்ளார். சேலம் நகரசபை உயர்நிலைப் பள்ளி மாணவர் இல்லத்தில், முதன்முதலாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்களைச் சேர்த்தார். இதனால் அப்போது ராஜாஜிக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அவர் மீது நகரசபைக் கூட்டத்திலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜாஜி செய்தது மதவிஷயத்தில் தலையிடுவதாகும் என்று கூறி ஆங்கிலேயே ஆளுநர் அவருக்கு தடை உத்தரவு போட்டார். அதுமுதல் ராஜாஜி, சாதி பேதத்தை தகர்க்கும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்.
குலக்கல்வி திட்டம்
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைகொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. அப்போதைய காலத்தில் ஏட்டுகல்வி என்பது மெக்காலேவின் கல்வித் திட்டமாகும். ஏட்டுக் கல்வி மட்டும் போதாது, உழைப்பு மூலம் கிடைக்கும் வருமானமும் வேண்டும் என்ற காந்தியின் கோட்பாட்டில் ராஜாஜி உறுதியாக இருந்தார். 1937-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பொறுப்பேற்றார்.
பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த அக்காலகட்டத்தில், பெற்றோர்களின் வேலைகளுக்கு உறுதுணையாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் இருந்தனர். முழுநேரக் கல்வி என்றால், பெரும்பாலான பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்த முதல்வர் ராஜாஜி, ‘மாடிஃபைடு எஜுகேஷன்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். காலை முதல் மதியம் வரை அல்லது மதியம் முதல் மாலை வரை, இதில் எதில் வாய்ப்பு உள்ளதோ அந்த நேரத்தில் குழந்தைகளைப் பெற்றோர் கண்டிப்பாக பள்ளிக்குக் அனுப்ப வேண்டும் என்றார்.
புதிய பள்ளிக்கூடங்கள் திறக்க முடியாத, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க முடியாத அப்போதைய சூழலில், இருக்கும் பள்ளிக்கூடங்களிலேயே இரு ஷிஃப்ட் அடிப்படையில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பாக அமைந்தது. இதனால் வந்த பணிச் சுமையை அப்போதைய ஆசிரியர்களால் ஏற்க முடியவில்லை. மேலும், முதல்வர் ராஜாஜி நிர்வாகரீதியாக கட்டுப்பாட்டுடன் இருந்ததால் சொந்த மற்றும் மாற்றுக் கட்சியினரின் வெறுப்புக்கு உள்ளானார். இதனால், அவரது கல்வித் திட்டத்தை குலக்கல்வி என திரித்து மக்களிடம் பலர் பரப்பினர். ஆனால், கல்வித் திட்ட ஆவணத்தில் குலக்கல்வி முறை என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 6 ஆயிரம் பள்ளிக் கட்டிடங்களை அவர் இடித்தார் என்பதும் ஆதாரமற்ற, அடிப்படை உண்மையற்ற தவறான கருத்தாகும்.
சாதிக்காக ராஜாஜி உழைக்கவில்லை. நாட்டுக்காகத்தான் தன் இறுதி நாள் வரை உழைத்தார். டி.வீரராகவன் என்பவர் ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்துள்ளார். இதை கேள்விப்பட்ட வரலாற்றுப் பேராசிரியரான ஏ.ஆர்.வெங்கடாஜலபதி தனது நூலில் அவரது ஆய்வு தொடர்பான தகவல்களைச் சேர்த்து 2020-ல் ‘ஹாஃப் ஏ டே ஃபார் கேஸ்ட், (Half a Day For Caste) என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இத்தகவல்கள் உள்ளன என்றார்.