Published : 23 Dec 2021 08:29 AM
Last Updated : 23 Dec 2021 08:29 AM

பூஞ்சேரி நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் ஆட்சியர் ஆய்வு: 11 பயனாளிகளுக்கு மாற்று இடத்தில் வீட்டு மனை பட்டா

மாமல்லபுரம்: பூஞ்சேரியில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டா நிலப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், 11 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மட்டும் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டாவழங்க நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும், நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரி பகுதிக்கு நேரில் வந்து, நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் என 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், நரிக்குறவர் மக்கள் ஏற்கெனவே வசித்து வரும் குடியிருப்புகளின் பின்னால், கழிப்பறை உட்பட பல்வேறு தேவைகளுக்கு புழக்கத்தில் உள்ள காலி நிலங்களை இணைத்து 11 நரிக்குறவர் பயனாளிகளுக்கு தலா ஒன்றரை சென்ட் பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கெனவே உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும், புதிதாக வீட்டு மனை பட்டா பெற்ற பயனாளிகள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளதாகவும் நரிக்குறவர்சமுதாயத்தினர் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக, நேற்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், நரிக்குறவர் மக்களிடம் வீீட்டு மனை பட்டா குறித்து கேட்டறிந்தார். பின்னர், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 11 பயனாளிகளுக்கு அதேபகுதியில் மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்தார். அப்போது,மேலும் சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கூறியதாவது: நரிக்குறவர் பயனாளிகள் மட்டும் மாற்று இடம் வேண்டும் என தெரிவித்தனர். இதன்பேரில், அதேபகுதியில் மாற்று இடம் வழங்கிகுடியிருப்புகள் அமைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை தெரிவித்தனர். உரிய விசாரணை மேற்கொண்டு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதுகுறித்து, பூஞ்சேரி கிராம மக்கள் கூறியதாவது: நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்களுக்கு மட்டுமே பட்டா வழங்க வேண்டும். கிராம மக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள நிலங்கள் பறிபோகாத வண்ணம் அரசின் நடவடிக்கை அமைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கான நிலமும் உள்ளது. எனவே, கிராம மக்களின் கோரிக்கையையும் மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

தங்கள் மனக்குமுறல் ‘இந்து தமிழ்' நாளிதழில் வெளியான உடனேயே அரசு தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கையும் எடுக்கப்படுவது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்களுக்கு மட்டுமே பட்டா வழங்க வேண்டும். கிராம மக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள நிலங்கள் பறிபோகாத வண்ணம் அரசின் நடவடிக்கை அமைந்தால் மகிழ்ச்சியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x