தொழிற்சாலைகளில் பெண்களை பணியமர்த்தும்போது சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் அறிவுறுத்தல்

தொழிற்சாலைகளில் பெண்களை பணியமர்த்தும்போது சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மின்னணுப் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளின் மனித வள மேலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் உள்ள இயக்கக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன் கூட்டத்துக்கு தலைமையேற்றார். கூட்டத்தில் காஞ்சிபுரம் கோட்டத்தில் அதிகஅளவில் பெண்களை பணியமர்த்தியுள்ள 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தொழிலக பாதுகாப்பு மற்று்ம் சுகாதார இயக்குநர் அறிவுறுத்தியதாவது:

தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது, தொழிற்சாலைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், பெண் தொழிலாளர்களை விடுதிகளில் தங்கவைக்கும்போது அதற்கான விதிமுறைகள், பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் களைத் தடுக்க சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தங்கும் விடுதிகளில் அடிப்படையான குடிநீர், பிற பயன்பாடுகளுக்கான நீர், கழிப்பறை, இதர அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கும் விடுதி அறைகளின் எண்ணிக்கை மற்றும் அளவுக்கேற்ப மட்டும் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட வேண்டும்.

தங்கும் விடுதிகளில் தகுதி வாய்ந்த பெண் வார்டன்கள் மற்றும் போதிய அளவில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதிப்பதுடன் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர் களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, புகார் குழு அமைக்கப்பட்டு, முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும்.

பெண் தொழிலாளர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள், விடுப்பு மற்றும் இதர நல வசதிகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகங்களின் பங்களிப்பு அனைத்து விஷயங்களிலும் முறையாக இருந்தால் மட்டுமே எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சென்னை மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் மு.வெ.செந்தில்குமார், காஞ்சிபுரம் கோட்ட இணை இயக்குநர், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in