

ஓசூர் பகுதிகளில் கேழ்வரகு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை கூலி உயர்ந்துள்ளதால் இயந்திரங் களின் உதவியுடன் விவசாயிகள் கேழ்வரகு அறுவடையில் ஈடு பட்டுள்ளனர்.
ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள், மானாவாரியில் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு பயிரிட்டுள்ளனர். கேழ்வரகு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், பெய்த தொடர் கனமழை காரணமாக கதிர்கள் சாய்ந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கேழ்வரகு அறுவடைப்பணிகளை தொடங்கி உள்ள விவசாயிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது மிகவும் சவாலாக உள்ளது. அறுவடை கூலியும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பெத்த எலசகிரியில் கேழ்வரகு பயிரி ட்டுள்ள விவசாயி சம்பங்கி கூறியதாவது:
கேழ்வரகு அறுவடை பணிக்கு கூலி ஆட்கள் கிடைப்பது கடின மாக உள்ளது. அப்படி யே கூலியாட்கள் கிடைத்தாலும் ஒரு நாள் கூலியாக இருவேளை சாப்பாட்டுடன் ரூ.500 முதல் ரூ.600 வரை கொடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதன்பின்னர் கதிர்களை களத்துக்கு கொண்டு சென்று கேழ்வரகை பிரித்து எடுக்கும் பணிக்கு, மொத்தமாக ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவா கிறது.
அதே சமயத்தில் இயந்திரங் களை பயன்படுத்தி கேழ்வரகு அறுவடை செய்யும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே செலவு ஏற்படுகிறது. இயந்திர அறுவடையில் நிலத்தில் சாய்ந்துள்ள கேழ்வரகு கதிர்களை கூட எளிதில் அறுவடை செய்ய முடிகிறது. மொத் தத்தில் இயந்திர அறுவடை முறையில் செலவு குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.