

தனது தந்தையின் ஈமச்சடங்கில் கலந்துகொள்வதற்காகவேலூர் சிறையில் இருக்கும் நளினி சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக் கில் ஆயுள் தண்டனை பெற் றுள்ள நளினி, வேலூர் பெண் கள் தனிச் சிறையில் உள்ளார். அவரை சந்தித்துப் பேசிய பின் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக அரசு தொடர்ந்து முயன்று மத்திய அரசின் அனுமதியைப் பெற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யும் என்ற முழு நம்பிக்கையுடன் இருப்பதாக நளினி தெரிவித்தார்.
நளினியின் தந்தை சங்கர நாராயணன் உயிரிழந்த 16-ம் நாள் காரிய நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் விடுப்பு கோரி சிறைக் கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்துள்ளார். இதன் மீது சிறைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்படும்.
அரசியலமைப்புச் சட்ட 161-வது பிரிவைப் பயன்படுத்த, தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது. அந்த பிரிவைப் பயன்படுத்தி ஒரு வாரத்துக்குள் 7 பேரையும் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு அனுமதி கொடுத்தால் உடனடியாக விடுதலை செய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.
நளினி- முருகன் சந்திப்பு
முன்னதாக நளினியை, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கணவர் முருகன் நேற்று காலை சந்தித்துப் பேசினார். டிஎஸ்பி பன்னீர்செல்வம் தலை மையிலான போலீஸார் முருகனை பாதுகாப்புடன் பெண்கள் தனிச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். காலை 7.55 மணியில் இருந்து 8.25 மணி வரை நளினி- முருகன் சந்திப்பு நடந்தது. பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஆண் கள் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.