சென்னையைப் போல் மதுரையிலும் எம்.பி. எம்எல்ஏ.,க்கள் வழக்கு விசாரணைக்கு தனி நீதிமன்றம்: தலைமை நீதிபதிக்கு மனு

சென்னையைப் போல் மதுரையிலும் எம்.பி. எம்எல்ஏ.,க்கள் வழக்கு விசாரணைக்கு தனி நீதிமன்றம்: தலைமை நீதிபதிக்கு மனு
Updated on
1 min read

மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பது போல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தலைமை நீதிபதியை வழக்கறிஞர்கள் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை உட்பட 14 மாவட்டங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ.,க்கள் வழக்குகளை விசாரித்து வருகிறார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த எம்.பி,, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை சென்னயில் தாக்கல் செய்வது, வழக்கை நடத்துவதில் வழக்கறிஞர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

இதனால் உயர் நீதிமன்றம் மதுரைம் கிளை உட்பட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனி நீதிபதி நியமிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in