

மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பது போல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தலைமை நீதிபதியை வழக்கறிஞர்கள் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில், "உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை உட்பட 14 மாவட்டங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை சென்னையில் தாக்கல் செய்வதிலும், வழக்கை நடத்துவதிலும் வழக்கறிஞர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். இதனால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனி நீதிபதி நியமிக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.