Last Updated : 22 Dec, 2021 01:52 PM

 

Published : 22 Dec 2021 01:52 PM
Last Updated : 22 Dec 2021 01:52 PM

போலீஸ் விசாரணையில் மதுரை இளைஞர் மர்ம மரணம்: சிபிசிஐடி 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோப்புப் படம்

மதுரை: போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன். இவரைக் கடத்தல் வழக்கில் விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனிடையே, காவல் நிலையத்தில் இருந்து பாலமுருகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விசாரணையின்போது போலீஸார் பாலமுருகனை அடித்துக் கொலை செய்ததாகவும், மறு பிரேதப் பரிசோதனை நடத்தவும், இழப்பீடு வழங்கக் கோரியும் பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் சில நாட்களிலேயே திடீரென தனது மனுவை முத்துக்கருப்பன் திரும்பப் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி டிபேன், உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், போலீஸாரின் அச்சுறுத்தல் காரணமாக முத்துக்கருப்பன் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் என்றும், முத்துக்கருப்பனை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இந்த மனு குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. மேலும் பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இளைஞர் பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய நீதிபதிகள், போலீஸாருக்கு போலீஸார் உதவி செய்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x