

சென்னை: காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இருளர் சமுதாயப் பெண்களுக்கு உடனடியாக ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருக்கோவிலூரில் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 15 இருளர் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது போதுமானதல்ல என்றாலும் இதை அரசு உடனே வழங்க வேண்டும்.
இருளர் இனப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருளர் இனப் பெண்கள் காவலர்களால் சீரழிக்கப்பட்ட வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் இதே நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த வழக்கை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்யும் பணியைக் கூட செய்யாமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. இந்த வழக்கைக் கண்காணிக்க பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.