சட்டப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல், வாடகை தராமல் கோயில் சொத்து ஆக்கிரமிப்போர் மீது போலீஸில் புகார்: அலுவலர்களுக்கு அறநிலையத் துறை அறிவுறுத்தல்

சட்டப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல், வாடகை தராமல் கோயில் சொத்து ஆக்கிரமிப்போர் மீது போலீஸில் புகார்: அலுவலர்களுக்கு அறநிலையத் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமல், வாடகை செலுத்தாமல் கோயில் இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு பல்வேறுகோயில்களில் ஆய்வு நடத்தி,கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை ரூ.1,600 கோடிமதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, அந்த நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்குள் கம்பி வேலிஅமைக்கும் பணி நடந்துவருகிறது.

சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமலும், உரிய வாடகை செலுத்தாமலும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆணையரது எழுத்து மூலமான புகாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

ஆக்கிரமிப்பாளர் மீது எந்த ஒரு தனிநபரும் எழுத்துப்பூர்வமான புகாரை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் கொடுத்தால், அதன் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோயில் அறங்காவலர்கள், தக்கார், செயல் அலுவலர்கள்ஆகியோர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல் நிலையத்தில் உடனடியாக புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆக்கிரமிப்புதாரர்களுக்கு எதிராக தனிநபர்களால் காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்மீதான விசாரணைக்கு தேவையானஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பையும் காவல் துறைக்கு வழங்குமாறும் கோயில்அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in