Published : 22 Dec 2021 07:25 AM
Last Updated : 22 Dec 2021 07:25 AM

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு: புதிய தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

‘டெட்’, ‘சி-டெட்’ தேர்வுகள்

மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரைபணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள மத்திய அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் பணியாற்ற சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம். சி-டெட் தேர்வைமத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. டெட் தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் இடம்பெறும். 90 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 82 மதிப்பெண் எடுக்க வேண்டும். டெட் தேர்ச்சியானது வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறைப்படி ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட வேண்டும்.

கரோனா தொற்று

தமிழகத்தில் முதல் டெட் தேர்வு 2013-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2014, 2017, 2019 என இதுவரை 4 டெட் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டும், இந்த ஆண்டும் டெட் தேர்வுநடத்தப்படவில்லை. அதேநேரம், கரோனா காரணமாக 2020-ம்ஆண்டு சி-டெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜனவரியில் டெட் தேர்வு நடத்தப் பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, தகுதித்தேர்வு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாததால் அடுத்த டெட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வு எப்போது நடத்தப்படும் என்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களும், பிஎட் முடித்த ஆசிரியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

‘‘டெட் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு தேர்வுநடத்தப்படும். அத்தேர்வின் முடிவு கள் வெளியிடப்பட்ட பின்னர் டெட் தேர்வில் வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும்’’ ்என்று கூறினார்.

சி-டெட் தேர்வைப் போல ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வைநடத்த வேண்டும் என்று ஆசிரி யர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x