

சென்னை உயர் நீதிமன்றத்தில் விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
கடந்த 2-ம் தேதி என் செல்போனில் இருந்து தமிழ்ச்செல்வன் என்பவரை தொடர்புகொள்ள முயன்றேன். அப்போது தவறுதலாக தமிழழகன் (திட்டகுடி தொகுதி தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவாக இருந்து, தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தவர்) செல்போனுக்கு அழைப்பு சென்றுவிட்டது.
இதையறிந்து, தவறுதலாக அழைத்துவிட்டதாக கூறி செல்போன் இணைப்பை உடனே துண்டித்து விட்டேன். பின்னர், அவர் என்னை செல்போனில் அழைத்தார். அப்போதும் தங்களை தவறுதலாக அழைத்துவிட்டேன் என்றேன்.
ஆனால், செல்போனில் நான் மிரட்டியதாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இருவரும் 11 வினாடிகள் மட்டுமே பேசினோம். இருப்பினும், இந்த வழக்கில் என்னை தவறுதலாக சேர்த்துள்ளனர்.
ஏற்கெனவே நான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுவிட்டேன். இப்போது எனக்கு முன்ஜாமீன் தேவைப்படுவதால் அதனை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர்.மாலா, இந்த மனுவை விசாரித்து தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். அதன்படி, மறுஉத்தரவு வரும்வரை பெண்ணாடம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி பார்த்தசாரதி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.