கருணாநிதியிடம் உதவியாளராக சேர்ந்து நிழலாக வாழ்ந்த சண்முகநாதன்

கருணாநிதியிடம் உதவியாளராக சேர்ந்து நிழலாக வாழ்ந்த சண்முகநாதன்

Published on

சென்னை: அரசியலில் தொடர்ந்து இயங்கும் தலைவர்கள் அனைவருக்குமே உதவியாளர்கள் இருப்பார்கள். ஆனால், தலைவர்கள் பேசப்படும் அளவுக்கு உதவியாளர்கள் பேசப்பட மாட்டார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. தலைவர்களிடம் தொடர்ந்து ஒருவரே உதவியாளராக இருக்க மாட்டார். அடிக்கடி உதவியாளர்களை மாற்றும் தலைவர்களே அதிகம்.

ஆனால், 1969-ல் கருணாநிதி முதல்வரானதில் இருந்து, தொடர்ந்து 48 ஆண்டுகள் கருணாநிதியிடம் உதவியாளராக இருந்திருக்கிறார் சண்முகநாதன். கருணாநிதியின் அரசியல் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான, சோதனையான காலகட்டங்களில் உடன் இருந்தவர் சண்முகநாதன்.

கருணாநிதியிடம் சண்முகநாதன் உதவியாளராக சேர்ந்த கதையே சுவாரஸ்யமானது. காவல் துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக பணியில் இருந்த சண்முகநாதனுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு சென்று அவர்கள் பேசுவதை குறிப்பெடுத்து, தட்டச்சு செய்து அதிகாரிகளுக்கு அனுப்புவதுதான் பணி. அப்படி ஒரு முறை திமுகவின் முக்கியத் தலைவரான கருணாநிதியின் மேடைப் பேச்சை குறிப்பெடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பினார். அதன் அடிப்படையில் கருணாநிதி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின்போது மேடையில் தான் பேசியதை, ஒரு எழுத்துகூட மாறாமல், விடாமல் அப்படியே எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்த கருணாநிதி, தான் பொதுப்பணித் துறை அமைச்சரானதும், சட்டமன்ற மேலவை சுருக்கெழுத்தராக சண்முகநாதனை நியமித்தார். 1969-ல் முதல்வரான கருணாநிதி, தனது உதவியாளராக நியமித்துக் கொண்டார். அன்று முதல் அவர் மறையும் வரை அவரது நிழலாகவே தொடர்ந்தார்.

கருணாநிதி திட்டியதால் இருமுறைகோபித்துக் கொண்டு பணிக்கு வராமல் இருந்த நாட்களும் உண்டு. இரண்டு முறையும், தனது உதவியாளர்தானே என்று பாராமல், அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதி பற்றிசொல்லும் போதெல்லாம் சண்முகநாதனைப் பற்றி சொல்வதை யாராலும்தவிர்க்க முடியாது. இதுதான் சண்முகநாதனின் 48 ஆண்டுகால பணிக்கு கிடைத்த வெற்றி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in