கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளக்கரையில் - பொங்கல் விழாவில் திமுக, அதிமுக இடையே மோதல்: பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி காலணி வீசப்பட்டதால் பரபரப்பு

கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் பகுதியில் பொங்கல் விழா நடத்துவது குறித்து திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமனை பாதுகாப்பாக அழைத்து செல்லும் அதிமுகவினர். படம்: எஸ்.கோபு
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் பகுதியில் பொங்கல் விழா நடத்துவது குறித்து திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமனை பாதுகாப்பாக அழைத்து செல்லும் அதிமுகவினர். படம்: எஸ்.கோபு
Updated on
2 min read

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளக்கரையில் பொங்கல் விழாவுக்குசென்ற திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தில் 1994-க்கு பிறகு தண்ணீர் தேங்கவில்லை. கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர், தன்னார்வலர்கள் இணைந்து குளத்தை சீரமைத்தனர். ஒரு மாதத்துக்கு முன்பு, கோதவாடி குளத்துக்கு, பிஏபி வாய்க்கால் வழியாக நீர் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால், தண்ணீர் வரத்து அதிகரித்ததால், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்குளம் நேற்று அதிகாலை 2 மணிக்கு நிரம்பிஉபரிநீர் வெளியேறியது. இதையடுத்து, உள்ளூர் அதிமுக சார்பில் குளக்கரையில் உள்ள ஏரிகாத்த அம்மன் கோயிலில் பொங்கல் விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்க, பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உள்ளிட்டோர் நேற்று வந்தனர்.

இவரது வருகைக்கு அங்கிருந்த திமுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சி ஜெயராமனை முற்றுகையிட்டு, அங்கிருந்து வெளியேறுமாறு கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும், திமுகவை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, அக்கூட்டத்திலிருந்த ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கிகாலணியை வீசினார். அருகில்இருந்தவர் மீது காலணி பட்டது.இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளுஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீஸார் இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதை அடுத்து இருதரப்பினரும்அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, ‘‘நான் எம்எல்ஏ ஆன பின்னர் குடிமராமத்து திட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் விவசாயிகளுடன் இணைந்து குளத்துக்கான வரத்து வாய்க்கால், குளம் தூர்வாரப்பட்டது. குளம் நிரம்பியதால் அப்பகுதி மக்கள் பொங்கல் விழா வைத்து, என்னை அழைத்தனர். திமுக எம்பி-யை அழைக்கவில்லை. இதனால், என்னை கண்டதும் அதிமுகவுக்கு எதிராக திமுகவினர் குரல் எழுப்பினர். திமுகவினர் செயல் கண்டிக்கத்தக்கது’’என்றார்.

இதுகுறித்து திமுகவின் பொள்ளாச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் கூறும்போது, ‘‘முதல்வரின் அறிவுரைப்படி பொள்ளாச்சி எம்பி-யின் முயற்சியால் குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக எம்எல்ஏ-வாக உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் குளத்தை நிரப்புவதில் அக்கறை இல்லாமல் இருந்தார். தற்போது குளம் நிரம்பியதும், பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். அதிமுகவினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பழனிசாமி கண்டனம்

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக ஒன்றிய செயலாளர், 40 பேருடன் வந்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், பெண்களையும் ஆபாசமாக பேசியுள்ளனர். இதை அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் வேடிக்கை பார்த்துள்ளனர். காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தவறு செய்த திமுகவினர் மீதும், வேடிக்கை பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 350 ஏக்கர் பரப்பளவிலான கோதவாடி குளம் நிரம்பினால், குளத்தை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். ஆயிரக்கணக்கான கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது 312 ஏக்கர் மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. 40 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் உள்ளது. குளத்துக்கு தண்ணீர் வரும் பச்சார்பாளையம் நீர்வழிப்பாதை, குளத்தின் வடக்கு கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடைக் காலத்தில், குளத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் வறட்சி காலங்களில் சுமார் 1,200 அடி ஆழத்துக்குக்கீழ் சென்றுவிடும். குளத்தில் மேற்கொள்ளப்படும் நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்தினால் நீர்மட்டத்தை 100 அடி ஆழத்துக்கு கொண்டுவர முடியும். இதனால் இப்பகுதியில் கிணற்றுப் பாசன விவசாயம் செழுமையடையும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in