

விருதுநகரில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 69 தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 10 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கைக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் அதிக மருத்துவர்கள் உள்ள மாநிலம் தமிழகம்.
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதல் கட்டுமானத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.139 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 1,450 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
11 மருத்துவக் கல்லூரிகளையும் அடுத்த மாதம் பிரதமரும், முதல்வரும் பங்கேற்று திறந்து வைக்க உள்ளனர். அடுத்த மாதம், 12-ம் தேதி விழா நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா நடக்கும் பட்சத்தில் இங்கிருந்தே 11 அரசு மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றார்.