வீட்டுத் துணிகளையும் உள்ளாடைகளையும் துவைக்க சொன்ன நீதிபதியை பணி இடைநீக்கம் செய்க: வைகோ

வீட்டுத் துணிகளையும் உள்ளாடைகளையும்  துவைக்க சொன்ன நீதிபதியை பணி இடைநீக்கம் செய்க: வைகோ
Updated on
1 min read

சார்பு நீதிமன்றத்தில் அரசு பணியில் உள்ள அலுவலக உதவியாளரை நீதிபதியின் வீட்டுத் துணிகளைத் துவைக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றத்தில் பணிபுரியும் கடைநிலை பெண் ஊழியர் வசந்தி என்பவருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி குறிப்பாணை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அதில், ''நீங்கள் சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடும் துணிகளை சரிவர துவைக்காமல், குறிப்பாக உள்ளே அணியும் துணிகளை அறுவறுப்பு அடைந்து தூக்கி வீசி எறிந்து விடுவதாகவும், மேலும் அதிகாரி மற்றும் துணைவியார் இது குறித்து கேட்டதற்கு எதிர்த்துப் பேசியதாகவும் உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு தகுந்த முகாந்திரத்தை ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரப்படுகிறது'' என்று கேட்டிருக்கிறார்.

குறிப்பாணைக்கு அலுவலக உதவியாளர் வசந்தி ''இனி இது போன்று நிகழாமல் என் கடமையை நிறைவேற்றுவேன். என் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்'' என்று வேண்டிக்கொள்வதாக பதில் மடல் அனுப்பி இருக்கிறார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த 47 வயது வசந்தியின் கணவர் உடல் நலம் இல்லாதவர். இவரது இரு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

சார்பு நீதிமன்றத்தில் அரசு பணியில் உள்ள அலுவலக உதவியாளரை நீதிபதியின் வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்தது முறையற்ற செயல் ஆகும். அதிலும் நீதிபதியின் வீட்டுத் துணிகளைத் துவைக்க வைத்ததும், உள்ளாடைகளை துவைக்க மறுத்தார் என்று மிரட்டல் குறிப்பாணை அனுப்பியதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

நீதித்துறையில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் வேல்முருகன் என்பவர், மீன்கறி சமைக்கவில்லை என்பதற்காக நவம்பர் 21, 2012 இல் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலையும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்து இருக்கின்றார்.

நீதித்துறையின் மாண்பையும், மதிப்பையும் காப்பாற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாமாகவே முன்வந்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதித்துறையின் கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள சத்தியமங்கலம் சார்பு நீதிபதி செல்வம் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

நீதித்துறை மட்டுமின்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் இத்தகைய கொடுமைகள் நடப்பதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in