

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான பல வாகனங்கள் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கவும், குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவுநீர் அகற்றவும், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் பயன்படுத்தவும் கார், மினி லாரி, சிறிய இலகுரக வாகனம், கழிவுநீர் லாரி என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் தகுதிச்சான்று இன்றி இயங்கி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 56-ன்படி வணிகரீதியில் இயக்கப்படும் இலகு, கனரக வாகனங்களின் தகுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதுப்பிக்கவேண்டும். ஆனால், மாநகராட்சியின் பெரும்பாலான வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் பெறாமலேயே இயக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் அரசு வாகனம் என்பதால் அவற்றை ஆய்வு செய்வதே இல்லை. இதனால், தகுதிச் சான்றிதழ் பெறாமல் காலதாமதம் செய்கின்றனர். எனவே, விரைந்து தகுதிச் சான்றிதழ் பெற்று வாகனங்களை இயக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "தாம்பரம்மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் தாம்பரத்துடன் இணைக்கப்பட்டன. அங்கு இயக்கப்பட்ட பல வாகனங்கள் தகுதிச் சான்று இல்லாமல் இருப்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிதாக இணைந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாகனங்களை சரிவர பராமரிக்காததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. விரைந்து தகுதிச்சான்று பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றனர்.