

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் நாளை (டிச.23) நாட்டிய விழா தொடங்க உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் இந்திய நாட்டிய விழா, கடந்த ஆண்டு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் நடைபெறவில்லை.
தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், இந்த ஆண்டு நாட்டியவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 25-வது ஆண்டாக இந்த நாட்டிய விழா நாளை (டிச.23) மாலை தொடங்குகிறது. இதற்காக, கடற்கரை கோயில் வளாகத்தில் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சுற்றுலாத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பல்வேறு கண்காட்சி நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, 108 திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் பக்தர்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திவ்ய தேசங்களின் வடிவிலான சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதற்காக, கடற்கரை பகுதியில் பெரிய அளவில் மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டிய விழாவை தொடங்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வர உள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.