Published : 10 Mar 2016 08:19 AM
Last Updated : 10 Mar 2016 08:19 AM

பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள 363 வாக்காளர் சேவை மையங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், அடையாள அட்டை வழங்குதல் மற்றும் தேர்தல் தொடர்பான சேவைகளுக்காக தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்கள் வரும் 14-ம் தேதி முதல் செயல்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தலை அமைதியா கவும் பிரச்சினைகள் இல்லாமலும் நடத்தி முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக தேர்தல் துறை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக, நிருபர்களிடம் ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வசதியாக தமிழகம் முழுவதும் 269 தாலுகா அலுவலகங்கள், மண்டல வருவாய் அதிகாரி (ஆர்டிஓ) அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என 363 இடங்களில் கணினியுடன் கூடிய வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

இந்த மையங்கள் வரும் 14-ம் தேதி திங்கள்கிழமை முதல் மே 16-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை செயல்படும். ஆன்லைன் மூலம் பெயர் சேர்த்தல், திருத்தம், புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுடன் தேர்தல் தொடர்பான இதர சேவைகளுக்கும் இந்த மையத்தை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தாலும் அவை ஸ்கேன் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்ய வசதி உண்டு. புதிய வாக்காளர் அடையாள அட்டை வேண்டுவோர், வாக்காளர் சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 15 நாளில் அதே மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். விரைவுத் தபாலிலும் புதிய வாக்காளர் அட்டையை பெறலாம்.

ஆன்லைனில் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள், அட்டைக்கு ரூ.25, விரைவுத் தபாலுக்கு ரூ.40 சேர்த்து ரூ.65-ஐ செலுத்தினால் அவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். புதிய வாக்காளர்கள் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஆன்லைனில் பெயர் சேர்க்கலாம்.

பெயர் சேர்க்க விரும்பும் புதிய வாக்காளர்கள், அவர்களே நேரடியாக வாக்காளர் சேவை மையங்களுக்கு செல்லலாம். அல்லது குடும்பத்தில் உள்ள எவரேனும் செல்லலாம். வேறு நபர்களின் மூலம் இப்பணிகளை மேற்கொண்டால் கள ஆய்வின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரம் போன்றவற்றுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். வேலூர் ஆட்சியர், தமிழக உள்துறை செயலாளர் உள்ளிட்டவர்களை மாற்றுவது தொடர்பான மனுக்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதுபற்றி ஆணையம் முடிவெடுக்கும்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்கள், நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தினமும் 3 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இவை தவிர விதிமீறல் உள்ளிட்ட 1,105 புகார்களும் வந்துள்ளன. வாட்ஸ் அப்பில் தினமும் 25 முதல் 30 புகார்கள் வரை வருகின்றன. குறிப்பாக, கட்சிக் கொடிகள், விளம்பரங்கள் அகற்றப்படவில்லை என்பது தொடர்பாக புகார்களே அதிகமாக வருகின்றன.

100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்குடன் பணிகளை தொடங்கி யுள்ளோம். தற்போது மாவட்டங் களில் உள்ள தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவினர் தங்கள் பகுதியில் நடக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணி களை முழுமையாக வீடியோவில் பதிவு செய்துவருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x