Published : 24 Mar 2016 07:16 AM
Last Updated : 24 Mar 2016 07:16 AM

காஷ்மீரில் பனிச் சரிவில் உயிரிழந்த நெல்லை வீரரின் உடல் அடக்கம்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர் க.விஜய குமாரின் உடல், ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வல்லராம புரத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் விஜயகுமார்(23). காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தார். கடந்த 17-ம் தேதி லடாக் பகுதியில் கார்கிலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த விஜயகுமார் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் 2 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் காலையில் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விமானம் மூலம்

அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கும், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி அருகே அபிஷேகப் பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்துக்கு நேற்று காலை விஜயகுமாரின் உடல் வந்தது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டு, வல்லராமபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன், கோட்டாட்சியர் பெர்மி வித்யா, மாநிலங்களவை உறுப்பி னர்கள் தங்கவேலு, முத்துக் கருப்பன், விஜிலா சத்தியானந்த், சங்கரன்கோவில் எம்எல்ஏ முத்துச் செல்வி மற்றும் ராணுவ அதிகாரி கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து விஜயகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வல்லராமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்குள்ள மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. 14 ராணுவ வீரர்கள் தலா 3 ரவுண்டுகள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். மொத்தம் 42 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் விஜயகுமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகுமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x