

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. வரத்து குறைவால் இந்தஆண்டு கிறிஸ்துமஸ் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்றால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமின்றி இருந்தது.
இந்த ஆண்டு கரோனா தாக்கம் குறைந்திருப்பதால் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை தேர்வு செய்து வாங்கும் பணியில் கிறிஸ்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸை முன்னிட்டுவண்ண, வண்ண அலங்காரப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. குடில் அமைப்பதற்காக கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலையில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் எஸ்.முருகசேகர் கூறியதாவது:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. ஆனால், அலங்காரப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான அலங்காரப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படு கின்றன.
கரோனா அச்சுறுத்தல் மற்றும் மத்திய அரசின் கட்டுப் பாடுகள் காரணமாக பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால்தட்டுப்பாடு நிலவுகிறது. புதிய மாடல்களும் இந்த ஆண்டு இல்லை. அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
சாதாரண ஸ்டார்களை பொறுத்தவரை ரூ.10 முதல் ரூ.250 வரைவிற்கப்படுகின்றன. எல்இடி விளக்கு பொருத்தப்பட்ட ஸ்டார்கள் ரூ.150 முதல் ரூ.600 வரை கிடைக்கின்றன. இந்த ஆண்டு மக்கள் எல்இடி ஸ்டார்களை தான் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
அலங்கார சரவிளக்குகளை பொறுத்தவரை ரூ.100 முதல் ரூ.750 வரை விற்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை ரூ.500 முதல் ரூ.900 விலையில் விற்கப்படுகின்றன. அதுபோல கிறிஸ்துமஸ் மரம் ரூ.50 முதல் ரூ.12 ஆயிரம் விலைக்கு விற்கப்படுகின்றன. ஒளிரும் விளக்குகளுடன் கூடிய கிறிஸ்துமஸ் மரங்கள் ரூ.5,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் செட் ரூ.500 முதல் ரூ.7,000 வரை உள்ளது. குடில் வீடு ரூ.300 முதல் ரூ.1,500 வரை உள்ளது. இதேபோல் வண்ண வண்ண மணிகள், அலங்கார செடிகள், பூக்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது மழையும் ஓய்ந்துள்ளதால் வியாபாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் இன்னும் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.