

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நுண் நிதி நிறுவனங்களால் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பி.பூமயில் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா காலத்துக்கு முன்பும், பின்பும் பெண்கள் வாங்கிய கடன்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
30 மாவட்டங்களில் 1,387 பெண்களிடம் ஆய்வு செய்ததில் நுண் நிதி நிறுவனங்களால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய பிறகும் நுண் நிதி நிறுவனங்கள் கடன்களை திரும்பக் கேட்டும், வட்டி கட்ட வலியுறுத்தியும் கரோனா காலத்தில் பெண்களுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், பெண்களுக்கு தமிழக அரசிடம் சில எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. நுண் நிதி நிறுவனங்கள் அடாவடியாக வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஊரடங்குகாலத்தில் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
பெண்கள் தொழில் தொடங்குவதற்கு நிதி உதவி செய்யவேண்டும். தனித்து வாழும் பெண்களுக்குகடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களுக்கு புதிய தொழில்தொடங்குவதற்கு குறைந்த வட்டிக்கு கடன் உதவி செய்ய வேண்டும். நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகளை மாவட்டம் தோறும் நியமிக்க வேண்டும்.
கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத் தள்ளும் நுண் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகியவை பெண்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன. இவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் கமலா, மாவட்ட பொருளாளர் ராமலெட்சுமி, புறநகர் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.