மேலப்பாளையம் வழக்கையும் ரத்து செய்யுங்கள்: உயர் நீதிமன்றத்தில் மாரிதாஸ் முறையீடு
மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த யூடியூப்பர் மாரிதாஸ். இவர் மீது முப்படை தளபதி பிவின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரிலும், கரோனா முதல் அலை பரவலின் போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (டிச. 21) விசாரணைக்கு வந்தது.
மாரிதாஸ் தரப்பில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனு தொடர்பாக மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 23-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
