

உடுமலையில் சங்கருக்கு நேர்ந்த கொடூரம் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை ஆணைய ஆய்வாளர் தெரிவித் துள்ளார்.
உடுமலையில் கடந்த 13-ம் தேதி சங்கர் கொலையானது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை ஆதாரமாகக் கொண்டு, தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த அமைப்பின் தமிழ் மாநிலப் பிரிவுக்கான ஆய்வாளர் சி.சந்திரபிரபா மற்றும் கள ஆய்வாளர் லிஸ்டர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று உடுமலை போலீஸாரிடம் விசார ணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கொலையான சங்கரின் தந்தை வேலுச்சாமி மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவா (அதிமுக) கூறும் போது, ‘இக்கொலைச் சம்பவம் ஆதிக்க சாதியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டு களுக்கு முன்பு மடத்துக்குளத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக தலித் இளைஞரும் வேறு ஜாதி பெண்ணும் படுகொலை செய்யப்பட்டனர். 9 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், தற்போது நடைபெற்ற கொலைச் சம்பவமும் இருந்துவிடக்கூடாது. கொலையாளிகளுக்கு அளிக்கப் படும் தண்டனை இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்’ என்றார்.
விசாரணை அறிக்கை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் சந்திரபிரபா கூறும்போது, ‘உடுமலையில் தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அகில இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது.
ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை தாமாக முன் வந்து இவ்வழக்கை விசா ரணைக்கு எடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் அறிவுறுத்த லின்பேரில் போலீஸாரிடமும், பாதிக்கப்பட்ட தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் அரசு சார்பில் ஏற்கெனவே குறிப்பிட்ட அளவு உதவித் தொகை வழங் கப்பட்டுள்ளது. மேலும் பாதிக் கப்பட்ட குடும்பத்தின் தேவைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான வழிகாட்டுதல் களையும் எங்கள் அறிக்கையில் வழங்குவோம்.
மடத்துக்குளத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஆணையத் தின் கவனத்துக்கு கொண்டுவரப் படவில்லை. அதுகுறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.