

புதுக்கோட்டை: வாக்காளர் அடையாள அட்டையோடு, ஆதார் எண்ணை இணைப்பதால் தேர்தல் சீர்திருத்தம் வந்துவிடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டமாக கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு இன்று (டிச.21) தொடங்கியது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பெண்கள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தோ, உரிய மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாமல் திருமண வயதை 18-ல் இருந்து 21- ஆக உயர்த்துவது தேவையற்றது.
தமிழகத்தில் மூடிக்கிடக்கும் சர்க்கரை ஆலைகளை திறப்பதோடு, நலிவுற்றிருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை செயல்படுத்துவதற்கு உயர்மட்டக் குழுவைக் கூட்டி தீர்வு காணவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல. மேலும் உயர்த்தி வழங்க வேண்டும். மழை பாதிப்புக்கு இதுவரை ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் மவுனமாகவே மத்திய அரசு இருந்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. பணி நிரந்தரம் செய்யப்படுவதில்லை. இந்த சூழலில், இந்த நிறுவனங்களுக்கு ஏன் மத்திய அரசு சலுகைகளை வழங்க வேண்டும்?
அரசின் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த முறையில் அதிமுக ஆட்சியில்தான் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனர். இந்த நிலை தற்போதும் தொடர்கிறது. ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரும் காலங்களில் ஒப்பந்த முறையில் பணியாளர் நியமனம் செய்யக்கூடாது. நடைமுறையில் உள்ள பண ஆதிக்கத்தால் தேர்தல் ஜனநாயகம் முற்றிலும் சீரழிந்துவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பத்திரங்களாக நிதி வசூலிக்கப்படுகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாக்காளர் அடையாள அட்டையோடு, ஆதார் எண்ணை இணைப்பதால் தேர்தல் சீர்திருத்தம் வந்துவிடாது. நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றுவதை ஜனநாயகத்துக்கு எதிரானது.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. உடனடியாக அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும். காவல் துறை அந்தந்த திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்தவர்கள்தான் தற்போதும் இருக்கிறார்கள். அப்போது பாராட்டிவிட்டு, தற்போது தவறாக விமர்சிக்கக்கூடாது. அவர், நிதாமின்றி பேசி வருகிறார்'' என்றார்.