

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவிபட்டங்களை வழங்கினார். நடப்பாண்டில் 12,814 மாணவர்கள் பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள். சிறப்பிடம் பெற்ற 129 மாணவர்களுக்கு விழாவில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘சக்தி வாய்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே’.. எனத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: கரோனா காலத்தில் ஆராய்ச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது.
குறிப்பாக, பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறிவதில் அதீத முயற்சியை முன்னெடுத்த பல்கலைக்கழகத்துக்கு பாராட்டுகள். மற்றொருபுறம், மாநிலத்தில் நோய் பரவலை சிறப்பாக தமிழக அரசு கட்டுப்படுத்தியது. முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையேஇருக்கும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் போற்றத்தக்கது. சுகாதாரத் துறையை பொருத்தவரை தேசியஅளவில் தமிழகம் முதன்மையான இடத்தில் இருப்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
தன்னலமின்றி சேவையாற்றக் கூடியவர்கள் என்பதால்தான் மருத்துவர்களை கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நினைக்கிறார்கள். அத்தகைய அதிமுக்கியம் வாய்ந்த மருத்துவத்தை வணிகமயமாக்குவது என்பது நெறிகளுக்கும், நேர்மைக்கும் எதிரானஒன்று. எனவே, லாபநோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆற்ற அனைவரும் முன்வர வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகளை புறந்தள்ளாமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். தொடர்ந்து அறிவை மேம்படுத்துவதும், ஆரோக்கியத்தை பேணுவதும் மருத்துவர்களின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.