

சென்னை: ‘தவறு செய்பவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது’ என்று, அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சசிகலாவை மனதில் கொண்டே அவர் பேசியதாக சலசலப்பு எழுந்தது.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ‘ஏழைகளின் சிறிய சகோதரிகள்’ (லிட்டில்சிஸ்டர்ஸ் ஆஃப் தி புவர்) முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி, விழாவை தொடங்கி வைத்தனர். முதியோர் இல்லத்துக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் அவர்கள் பேசியதாவது:
ஓ.பன்னீர்செல்வம்: ‘கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: மனம் திருந்துங்கள்’ என்ற செய்தியை இன்று காலை படித்தேன். அதில் ஒருகதை சொல்லும் இயேசு இறுதியில், ‘‘நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே வந்துள்ளேன். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்பவர்கள் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது’’ என்று கூறியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
பழனிசாமி: கிறிஸ்துமஸ் என்றால் அன்பு. அந்த அன்பை போதிக்க உலகில் பிறந்தார் இயேசு.சாதி, மதம் பார்க்காமல், முதியவர், நோயாளி என பாராமல், அவர்களுக்கு உதவி செய்யும் உன்னத பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். கிறிஸ்தவர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பெஞ்சமின், அமைப்புச் செயலாளர் ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மீண்டும் சலசலப்பு
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஏற்கெனவே ஓபிஎஸ் கூறியிருந்தார். ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரும் அதற்கு ஆதரவு தெரிவித்ததால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் ஓபிஎஸ், பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால், பிரச்சினை முடிவுக்கு வந்தது. இருவரும் இணைந்தே செயல்படுவதாகவும் கூறிவந்தனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில், ‘தவறு செய்பவர்கள் திருந்தி வந்தால், ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது’ என்று சசிகலாவை மனதில் கொண்டே ஓபிஎஸ் பேசியதாக நிர்வாகிகள் பலரும் கூறிவருகின்றனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மன்னிப்பே கிடையாது’
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘செய்த தவறை உணர்ந்து, இனிமேல் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு. ஆனால், சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. இதில் ஒருங்கிணைப்பாளரும் உறுதியாக இருக்கிறார். அவரும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சசிகலாவுக்கும் இந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை’’ என்றார்.
கிறிஸ்துமஸ் விழாவை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ், பழனிசாமி இருவரும் சென்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அமைப்புத் தேர்தல் தொடர்பான பணிகளை பார்வையிட்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.