மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் எழுத்தாளர் இளசை சுந்தரம் மறைவு

மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் எழுத்தாளர் இளசை சுந்தரம் மறைவு
Updated on
1 min read

மதுரை: அகில இந்திய வானொலி நிலையமுன்னாள் இயக்குநரும், எழுத்தாளர், சொற்பொழிவாளர் எனபன்முகத் திறன் படைத்த முனைவர்இளசை சுந்தரம் (75) மதுரையில் நேற்று அதிகாலையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் 16.7.1946-ல் பிறந்த இளசை சுந்தரம், தூத்துத்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.ஏ. பி.எட், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்தார்.

1970 முதல் 1976 வரை எட்டையபுரம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர், அகில இந்தியவானொலியில் பணியில் சேர்ந்து,மதுரையில் வானொலி நிலையம் மற்றும் பொதிகை தொலைக்காட்சியில் இயக்குநராக பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

மதுரை ஆண்டாள்புரம் அக்ரினி குடியிருப்பில் துணைவியார் ரேவதி சுப்புலெட்சுமியோடு வசித்து வந்தார். இவர் மதுரையில் கல்லூரி ஒன்றில் பணி புரிகிறார்.

இளசை சுந்தரம் மகாபாரதம், கம்ப ராமாயணம், கந்த புராணம் என தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். பட்டிமன்றங்களில் நடுவராக இருந்துள்ளார்.

சாதகப் பறவை சிறுகதைத் தொகுப்பு, பெருந்தலைவர் காமராசர், தியாகி கக்கன், தோழர் ஜீவா–200, மகாத்மா–200, மலரட்டும் மனிதநேயம் உட்பட 30 நூல்களை எழுதி உள்ளார்.

தமிழக அரசின் இயல், இசை நாடக மன்றம் சார்பில் இயற்றமிழ் அறிஞருக்கான கலைமாமணி விருது உட்பட வெளிநாடுகளிலும் பல விருதுகளை பெற்றுள்ளார். ‘வானொலி வளர்த்த தமிழ்’ என்ற இவரது ஆய்வேட்டுக்காக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கான குடியரசுத் தலைவர் விருதும் பெற்றுள்ளார்.

ஆண்டாள்புரம் அக்ரினி குடியிருப்பில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இளசை சுந்தரத்தின் உடல், நேற்று மாலை கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in