

மேம்பாலம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 96 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.
கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு, உக்கடம் பெரிய குளக்கரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளுக்காக உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள 96 வீடுகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அங்கிருந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “96 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் புல்லுக்காடு பகுதியில் வீடுகள் வழங்கப் பட்டுவிட்டன. அவர்கள் கேட்ட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளன. அனைவரும் புதிய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை” என்றனர்.