

சென்னை: முதல்வர் தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதல்வருக்கான ‘மின்னணு தகவல் பலகை’யை தொடங்கி வைத்து, நாளை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது திமுக 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. இதுதவிர, தொகுதிகள்தோறும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. தற்போது ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 205-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பலவற்றுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தானே நேரடியாக அனைத்து துறை திட்டங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையிலும் முதல்வர் இறங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய முதல்வர், “அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன் மூலம் நான் தினசரி பார்க்கப் போகிறேன். என் அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் அதில் இடம் பெறும். வாரம் ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யப்போகிறேன்’’ என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வருக்கான ’மின்னணு தகவல் பலகை - டேஷ்போர்டு’ தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக உள்ள டேவிதார் நியமிக்கப்பட்டார். வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள்தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு, அவை ஒருங்கிணைக்கப்பட்டன. இதில், முதல்வர் விரும்பும் துறையின் தகவல்களை உடனடியாகப் பார்க்க முடியும். இந்த மின்னணு தகவல் பலகைக்கான மென்பொருள் உருவாக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் பலகையை நாளை (டிச. 22-ம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்கி வைத்து, பார்வையிடுகிறார்.
தகவல் பலகை குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் கூறும்போது, “மத்திய பிரதேசம், ஆந்திரா, நாகலாந்து, இமாசலபிரதேசம், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதல்வருக்கான மின்னணு தகவல் பலகை உள்ளது.
இதில், திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால், தமிழக முதல்வருக்காக உருவாக்கப்பட்டுள்ள தகவல் பலகையை தற்போது முதல்வர் மட்டுமே பார்க்க இயலும். அவர் தன் அறையில் இருந்தபடியே, இன்றைய தங்கம் விலை நிலவரம், காய்கறி விலை நிலவரம் என அனைத்து விவரங்களையும் ஒரு ‘சொடுக்’கின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். விரைவில் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வசதிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’’ என்றனர்.