Published : 21 Dec 2021 10:08 AM
Last Updated : 21 Dec 2021 10:08 AM

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை மறுப்பு;கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகை: நேர்முகத் தேர்வை நிறுத்தி வைக்க உடன்பாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, நூற்றுக்கணக்கானோர் அணுமின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அணுமின் நிலையத்தில் ரூ. 65 ஆயிரம் மாத ஊதியத்தில், 2 ஆண்டுகள் தற்காலிக பொறியாளர்களாக 34 பேரை தேர்வு செய்வதற்காக, கடந்த சில வாரங்களுக்குமுன் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,700-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர். இத்தேர்வுக்கான முடிவு சமீபத்தில் வெளியானது.

அதில், கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த யாரும் தேர்ச்சி பெறவில்லை. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஒட்டுமொத்தமாக தேர்வு செய்யப்பட்டனர்.

`உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக அணுமின் நிலையம்வாக்குறுதி அளித்து, இப்பகுதியிலுள்ளவர்களில் நிலங்களைபெற்றுக்கொண்டார்கள். ஆனால், இப்போது வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது’ என்றுஅவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அணுமின்நிலைய நுழைவுவாயிலில் நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடங்குளம் ஊராட்சி தலைவர் வின்சி மணிஅரசு தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜான்சி ரூபாஉள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும், உள்ளூர் மக்களும் பங்கேற்றனர்.

கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் அணுமின் நிலையத்துக்குள் பணிக்கு செல்ல முடியவில்லை. அணுமின் நிலைய வளாகத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 4 மணி நேரம் நீடித்தது.

கூடங்குளம் அணுமின் நிலையஅதிகாரிகளும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீஸாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து, ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோகாட் போலே, 5 மற்றும் 6 -வது அணு உலைகளின் திட்ட இயக்குநர் எம்.எஸ். சுரேஷ், மனிதவள மேம்பாடு பொது மேலாளர் அன்புமணி, மேலாளர் அருண்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், ஊராட்சி தலைவர்கள் வின்சி மணியரசன் (கூடங்குளம்), சகாயராஜ் (விஜயாபதி), இந்திரா முருகேசன் (இருக்கன்துறை) உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அணுமின் நிலையத்தில் நடைபெற்ற பொறியாளர் பணிக்கான தேர்வை நிறுத்தி வைக்கவும், இதுதொடர்பாக குழு அமைத்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x