ஆட்களை வைத்து மிரட்டுவது முதல்வர் ரங்கசாமிக்கு அழகல்ல: நாராயணசாமி ஆவேசம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: "நிவாரணம் குறித்து கேட்டவருக்கு ஆட்களை வைத்து மிரட்டும் நடவடிக்கை முதல்வர் ரங்கசாமிக்கு அழகல்ல" என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடியோ பதிவில், "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியேற்று 7 மாதங்களாகிறது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. மழை நிவாரணம், விவசாயிகள் நிவாரணம் தரவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளது. மாநில அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. என்ஆர்.காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக உள்ளது. இதனால்தான் காரைக்காலை சேர்ந்தவர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மழை நிவாரணம் எப்போது தருவீர்கள் என செல்போனில் கேட்டார். அதற்கு ரங்கசாமி, "நான் ராஜா இல்லை. மேலயும், கீழேயும் அமைச்சர்கள் உள்ளனர்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் ஆட்சியில் கூறியபோது ரங்கசாமி மவுனமாக இருந்தார். அதிகாரிகளோடு ஒத்துப்போக வேண்டும் என்றார். இப்போது அதிகாரிகள் ஒத்துப்போகவில்லையா? நிதியில்லாமல் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு ரங்கசாமி அதிகாரிகள் மீது பழிபோடுகிறார்.

போனில் பேசியவரை ரங்கசாமியின் ஆதரவாளர் சங்கர் என்பவர் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளார். அவருக்கு முதல்வரிடம் போனில் பேசியவர் எண் எப்படி கிடைத்தது. சங்கரிடம் எண்ணை கொடுத்து ரங்கசாமி மிரட்டும்படி கூறினாரா என்ற கேள்வி எழுகிறது. கொலைமிரட்டல் விடுவது ரங்கசாமி எந்தளவு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது. மக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டால் அதை நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டு ஆட்களை வைத்து மிரட்டுவது முதல்வருக்கு அழகல்ல.

ரங்கசாமி ஆட்சியில்தான் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, ஆட்கடத்தல் நடக்கிறது. முதல்வர், அமைச்சர்களிடையே ஒற்றுமையில்லை. மக்கள் விரோத ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார். இதனால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் உள்ள தொழிற்சாலை அதிபர்களிடம் மாமூல் தர வேண்டும் என பேசுகின்றனர். இந்த அராஜக வேலையை சில அமைச்சர்கள் செய்வதாக சேதராப்பட்டு, கரசூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளது" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in