

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீப மை சாற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, மாணிக்கவாசகரின் பத்து நாள் உற்சவம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்த பக்தர்களுக்கு மாணிக்கவாசகர் அருள் பாலித்தார்.
இதற்கிடையில், விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நேற்று (19-ம் தேதி) இரவு எழுந்தருளினர். பின்னர் அவர்களுக்கு இன்று (20-ம் தேதி) காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட, மகா தீப மை சாற்றப்பட்டது. அப்போது, அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து திருமஞ்சன கோபுர வீதி வழியாக வந்து, மாட வீதியில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் பவனி வந்து அருள் பாலித்தார். அவர்களுடன், திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகரும் வலம் வந்து காட்சி கொடுத்தார். அவர்களை வழியெங்கும் பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், ராஜகோபுரம் வழியாக சுவாமிகள் (உற்சவ மூர்த்திகள்) வந்து மாட வீதியில் வலம் வரும் நிலையில், நடராஜ பெருமான் மட்டும் திருமஞ்சன கோபுரம் வழியாக வலம் வருவது கூடுதல் சிறப்பாகும்.
கரோனா கட்டுப்பாடு காரணமாக, கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, மாட வீதியில் சுவாமிகளின் உற்சவத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆருத்ரா தரிசனத்தின்போது மாட வீதியில் நடராஜரின் உற்சவம் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதை பக்தர்கள் வரவேற்றனர். நடராஜ பெருமானுக்கு தீபப் பை அணிவிக்கப்பட்டதை அடுத்து, வரும் 23-ம் தேதி முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக மகா தீப மை வழங்கப்பட உள்ளது.