வடமாநில பாணியில் புதுச்சேரி, காரைக்காலில் டிச.25, 26-ல் முதல் முறையாக நதி திருவிழா

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: வடமாநிலத்தில் நடப்பதை போன்று புதுச்சேரியில் வரும் 25-ம் தேதியிலும், காரைக்காலில் வரும் 26-ம் தேதியிலும் நதி திருவிழா நடக்கிறது.

புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா கோயிலில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணையான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழாநடைபெற இருக்கிறது. புஷ்கரணி விழா சிறப்பாக நடைபெற வேண்டி சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை கங்கா ஆரத்தி இங்கு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், வடமாநிலங்களில் நடைபெறுவதை போன்று முதல் முறையாக நதி திருவிழாவும் அரசு சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் நடக்கிறது. இதுபற்றி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வழிகாட்டுதல்படி புதுச்சேரி சுற்றுலாத் துறையும், இந்து சமய நிறுவன ஆணையகம், பிற அரசு துறைகள் இணைந்து புதுச்சேரி, காரைக்காலில் நதி திருவிழாவை நடத்த உள்ளன. வரும் 25-ம் தேதி மாலை புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி கரையில் நதி திருவிழா நடக்கும். இதையொட்டி கரகாட்டம், மயிலாட்டம், காவடி, மேளம், தாளவாத்தியம், சிவவாத்தியம், தெருக்கூத்து, தப்பாட்டம் ஆகிய கலைநிகழ்வுகள் நடக்கும். அதைத்தொடர்ந்து கங்கா ஆரத்தி நடக்கும். அதேபோல் காரைக்காலில் வரும் 26ம் தேதி மாலை காவிரிக் கரையில் நதி திருவிழா நடக்கும். காரைக்காலில் நடக்கும் இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் வரும் ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை 27வது அகில உலக யோகா திருவிழாவும் புதுச்சேரியில் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் https://pondytourism.py.gov.in/yoga என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். உள்ளூர் மாணவர்களுக்கு பங்கேற்பு கட்டணம் இம்முறை இலவசமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை தியானப்பயிற்சி, இலவச யோகாப்பயிற்சி, யோகா கருத்தரங்கம், யோகாசனப் போட்டிகள், யோகா-இயற்கை சிகிச்சைகள் அடங்கிய நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடி ஆகியவை அமையும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in