புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியோருக்கே அனுமதி

புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியோருக்கே அனுமதி
Updated on
1 min read

புதுச்சேரி: "இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும்" என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

புதுவையில் கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பெரியளவில் நடைபெறவில்லை. தற்போது கரோனா குறைந்துள்ள நிலையில், புதுவையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுவைக்கு வரும் பயணிகளுக்கு சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறும்போது, “கரோனா வழிகாட்டு விதிமுறைப்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். வரும் டிசம்பர் 31- ம் தேதி இரவு கடற்கரைச் சாலையில் சிறப்பு நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கும். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள். ஹோட்டல்களிலும் புத்தாண்டு நிகழ்வுகள் நடத்தலாம். புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த திட்டமிடும் ஹோட்டல்கள், நிறுவனங்கள் வரும் டிசம்பர் 23-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, சுற்றுலாத்துறைக்கும் தெரிவிக்கவேண்டும்.

சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் வரும் டிசம்பர், 30, 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் தேசிய அளவில் புகழ் பெற்ற 45 இசைக்கழுக்கள் டிஜே இசைநிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. வரும் டிசம்பர்31-ம் தேதி மதியத்துக்கு பிறகு புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து கட்டுபாடுகள் போலீஸாரால் செய்யப்படும். வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து கடற்கரை சாலை வர மினி பஸ்கள் சுற்றுலாத்துறையால் இயக்கப்படும். கரோனா விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

புதுச்சேரி வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஹோட்டல்களில் தங்குவோரிடமும் இது பரிசோதித்த பிறகே அறைகள் தரப்படும். தடுப்பூசி சான்றிதழும் பரிசோதிக்கப்படும். பழைய துறைமுகம், சுண்ணாம்பாறு, பாரடைஸ் கடற்கரை, சீகல்ஸ் ஆகிய இடங்களில் கலை நிகழ்வுகள் நடக்கிறது” என்று புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in