Published : 20 Dec 2021 02:08 PM
Last Updated : 20 Dec 2021 02:08 PM

வேலூர் நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு திருட்டு: நகைகளை மீட்ட தனிப்படையினர்

நகைகள் திருட்டுப் போன வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் படம்.

வேலூர் : வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு திருடப்பட்ட நகைகளை தனிப்படை போலீஸார் மயானத்தில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இந்தக் கடையின் பின்புறம் சுவரைத் துளையிட்டுக் கடந்த வாரம் 14-ம் தேதி நள்ளிரவு புகுந்து மர்ம நபர் ஒருவர் நகைகளைத் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அடுத்த நாள் 15-ம் தேதி காலை கிடைத்த தகவலின் பேரில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கடையினுள் புகுந்த ஒல்லியான தேகத்துடன் இருக்கும் நபர் ஒருவர் சிங்கத்தின் முகமூடியுடன் விக் அணிந்துள்ளார். அவர் அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் ஸ்ப்ரே அடித்துவிட்டு ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளார். லாக்கரில் இருந்த நகைகளைத் திருட முயலாததால் அதிலிருந்த சுமார் 70 கிலோ தங்க நகைகள் தப்பியது தெரியவந்தது.

திருட்டுப் போன நகைகளின் விவரங்கள் குறித்து டிஐஜி ஏ.ஜி.பாபு நேரடியாக ஆய்வு செய்தார். இதில், 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் 819.865 கிராம் எடையுள்ள வைர மோதிரங்கள், 53.758 கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240.358 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ்கள், 100.577 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இது தொடர்பாக கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த வழக்கில் டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். மேலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேஜிஎப் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் தனிப்படையினர் சென்றனர்.

இதற்கிடையில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் டீக்கா ராமன் (23) என்பவரைக் காவல் துறையினர் இன்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நகைகளை அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனிடையே, இன்று சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x